Monday, June 14, 2010

மாத்தி யோசி.....




வெற்றியாளர்களுக்கும் தோல்வியாளர்களுக்கும் இடையே எத்தனையோ வேறுபாடுகள் இருக்கின்றன என்றாலும் ஒரு வேறுபாடு மிகவும் பிரதானமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். அது என்னவென்றால் வெற்றியாளர்கள் மாற்றங்கள் நிகழும் போது அதற்குத் தகுந்தாற் போல் உடனடியாக மாறி அந்த மாற்றங்களுடன் வரும் வாய்ப்புகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். தோல்வியாளர்களோ நிகழும் மாற்றங்களைக் கண்டு முகம் சுளிக்கிறார்கள். மனம் வருந்துகிறார்கள். புலம்புகிறார்கள். எனவே அந்த மாற்றங்களை ஏற்றுக் கொள்ளவும், மாற்றங்களுடன் வரும் வாய்ப்புகளைக் கண்டு கொள்ளவும், பயன்படுத்தவும் தவறி விடுகிறார்கள்.

உலகில் மாறுதல் ஒன்றே மாறாத நியதி என்று சொல்வார்கள். மாறுதல் உலகம் இயங்குவதன் அறிகுறி. உலகம் இயங்கிக் கொண்டு இருக்கும் வரை மாறுதலும் இருந்து கொண்டே இருக்கும். உலகம் யாருடைய தனிப்பட்ட கருத்தின்படியும் இயங்குவதில்லை. அவர்கள் கருத்தைப் பொருட்படுத்துவதுமில்லை. அது பிடிக்காதவர்கள் உலகில் பின்னுக்குத் தள்ளப்படுவார்கள்.

மாறுகின்ற காலத்தில் மாறுகின்ற தேவைகளுக்கேற்ப தங்கள் வழி முறைகளை மாற்றிக் கொண்டு செயல்படும் மனிதர்கள் மட்டுமே வெற்றியடைகிறார்கள். நேற்றைய தேவைகளுக்கேற்ப உங்களது இன்றைய செயல்பாடுகள் இருந்தால் எப்படி வெற்றி கிடைக்கும்?

அல்கெமிஸ்ட் என்ற பிரபல நாவலில் இதற்கு ஒரு அழகான உதாரணத்தைக் காணலாம். ஒரு சிறிய மலை மேல் அழகான கண்ணாடிப் பொருள்க¨ள் விற்கும் கடை ஒன்று இருந்தது. ஒரு காலத்தில் மிக நன்றாக வியாபாரம் நடந்த கடையில் காலம் செல்லச் செல்ல வியாபாரத்தில் தொய்வு ஏற்பட்டது. மலை அடிவாரத்திலேயே நிறைய கடைகள் வந்து விட யாரும் கண்ணாடிப் பொருட்களை வாங்க அந்த மலைக்கு மேல் வருவதை நிறுத்தினர். அந்த கடைக்காரருக்கோ அந்த வியாபாரம் தவிர வேறு வியாபாரமும் தெரியாததால் வேறு வழியில்லாமல் அதையே நடத்திக் கொண்டு வந்தார்.

சாண்டியாகோ என்ற இளைஞன் அவர் கடையில் வேலைக்குச் சேர்ந்தான். சம்பளம் மிகக் குறைவாகவே தந்த கடைக்காரர் நடக்கும் விற்பனையில் அதிக கமிஷன் தருவதாகச் சொன்னார். வியாபாரமே இல்லாததால் கமிஷன் எங்கே தரப் போகிறோம் என்ற எண்ணம் அவருக்கு. இரண்டே நாளில் உண்மை நிலவரத்தை சாண்டியாகோ உணர்ந்தான். வேறு கடைகளே இல்லாத காலத்தில் செய்த வியாபார முறையையே இப்போதும் கடைக்காரர் பின்பற்றுகிறார் என்று புரிந்தது. அவன் அவரிடம் கடைக்கு வெளியே ஒரு ஷோ கேஸ் வைத்து அழகான புதிய பொருட்களைப் பார்வைக்கு வைத்தால் கீழே செல்பவர்களில் சிலரை அது ஈர்க்கக்கூடும் என்று சொன்னான். கடைக்காரருக்கு பெரிய ஆர்வம் இல்லா விட்டாலும் அப்படியே செய்தார். புதியவர்கள் பலரும் வர ஆரம்பிக்க விற்பனையும் அதிகரித்தது.

ஒரு நாள் மலையேறிய ஒருவர் குடிக்க நல்ல தேநீர் கடை கூட இல்லை என்று அங்கலாய்த்தது சாண்டியாகோ காதில் விழுந்தது. அவன் கடைக்காரரிடம் சொன்னான். "நாம் தேநீரும் தயாரித்து நம்முடைய அழகான கண்ணாடிக் கோப்பைகளில் தந்தால் தேநீரும் விற்கலாம். பலரும் வீடுகளிலும் அது போல் குடிக்க கண்ணாடிக் கோப்பைகளை வாங்கிக் கொண்டு போவார்கள்" என்றான். அவருக்கு அதிலும் பெரிய பலன் கிடைக்கும் என்று தோன்றவில்லை. ஆனால் சம்மதித்தார்.

அவன் சொன்னபடியே பலரும் வந்து தேநீர் குடித்து அது போன்ற அழகான கோப்பைகளை வாங்கிக் கொண்டு போனார்கள். நாளடைவில் அந்தக் கடை பிரபலமாகி வியாபாரமும் அதிகரித்து மேலும் இரண்டு பேரை வேலைக்கு எடுத்துக் கொண்டு கூட்டத்தை சமாளிக்க வேண்டி இருந்தது. சாண்டியாகோ வந்திராவிட்டால், காலத்தின் மாறுதல்களுக்கு ஏற்ப புதிய வழிகளைப் பின்பற்றியிரா விட்டால் அந்தக் கடையை அவர் விரைவில் மூடி விட வேண்டி இருந்திருக்கும்.

மாறுதல் இயற்கை என்றாலும் அது ஏற்படுத்தும் புதிய சூழல் நமக்குப் பிடிபடாமலும், புரியாமலும், சிறிது அசௌகரியமாகவும் இருப்பது இயல்பே. ஆனால் மாறுதல் ஏற்படும் போது இது வரை கிடைத்திராத வாய்ப்புகளும் கிடைக்கும் என்ற ஞானத்தோடு மாறுதல்களை எதிர்கொள்வதே அறிவு.

சில சமயங்கள் மாறுதல்கள் நம் வாழ்க்கையின் அஸ்திவாரத்தையே அசைப்பனவாகவும் இருப்பது உண்மையே. இருப்பவை அனைத்தையும் இழக்க நேர்வது போன்ற மாறுதல்கள் பூதாகாரமாக இருக்கலாம். ஆனால் கவலையில் ஆழ்வதும், விதியை நொந்து கொள்வதும் அதற்குத் தீர்வாகாது. மாறுதல்கள் உணர்த்தும் பாடங்களைப் படித்து, தரும் வாய்ப்புக¨ளை முறையாகப் பயன்படுத்தி மீண்டு வருவதே வெற்றி. சிலவற்றை இழந்தால் ஒழிய நம் பார்வை வேறுபக்கம் திரும்பாது என்பதற்காகவே கூட விதி நம்மை சிலவற்றை இழக்க வைக்கலாம். ஒருவிதத்தில் அது நமக்கு அனுகூலமே ஒழிய நஷ்டமல்ல.

சொய்சீரோ ஹோண்டா என்ற இளைஞர் படிக்கும் காலத்திலேயே கார்களுக்குப் பயன்படுத்தும் புதிய பிஸ்டன் ஒன்றை உருவாக்கி அதை டயோட்டா கார் கம்பெனிக்கு அனுப்பினார். அந்த வகை பிஸ்டனைப் பயன்படுத்தினால் பல விதங்களில் காரோட்டம் மேம்பாடடையும் என்று அவர்களுக்குத் தெரிவித்தார். அது தங்களுடைய தேவைகளைப் பூரணமாகப் பூர்த்தி செய்யவில்லை என்று தெரிவித்து டயோட்டா கம்பெனியினர் திருப்பி அனுப்பி விட்டனர். மீண்டும் இரண்டு வருடங்கள் கழித்து அந்தப் பிஸ்டனை மேம்படுத்தி வடிவமைத்து அதை டயோட்டாவுக்கு மறுபடி அனுப்ப அந்தப் புதிய பிஸ்டனை அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். அதைத் தயாரித்துத் தரும் உரிமை ஹோண்டாவுக்கு அளிக்கப்பட்டது.

ஹோண்டா தன்னிடம் இருப்பவை அனைத்தையும் முதலீடாகப் போட்டு பிஸ்டன் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றைக் கட்டத் தொடங்கினார். தொழிற்சாலை கட்டும் பணி முடியும் தருவாயில் ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டு தொழிற்சாலை தரைமட்டமாகியது. ஹோண்டா தன் மனைவியின் நகைகளை விற்று, நண்பர்களிடம் கடனை வாங்கி மீண்டும் தொழிற்சாலை கட்டத்துவங்கினார். துரதிர்ஷ்டவசமாக அந்தக் கட்டிடம் முடிவடையும் நேரம் இரண்டாம் உலகப் போர் ஆரம்பமானது. எதிரிகளின் விமானத் தாக்குதலால் அந்தக் கட்டிடமும் தவிடுபொடியானது.

இதையெல்லாம் மாற்றம் என்று சொல்வதை விட நாசம் என்று சொல்வது மிகப் பொருத்தமாக இருக்கும் என்றாலும் ஹோண்டா விதியை நொந்து கொண்டு முடங்கவில்லை. இரண்டாம் உலகப் போரின் இறுதியில் கடுமையான பெட்ரோல் மற்றும் கேஸ் தட்டுப்பாடு ஜப்பானைத் தாக்கியது. கார்களை இயக்க முடியாமல் பலரும் அவதியுற்றனர். ஹோண்டாவும் எங்கும் காரை எடுத்துச் செல்ல முடியாமல் தத்தளித்தார். வேறு வழி இல்லாமல் தன் சைக்கிளுக்கு மோட்டார் ஒன்றைப் பொருத்திக் கொண்டு வீட்டுக்குப் பொருட்கள் வாங்கச் சென்றார். அதைப் பார்த்த அக்கம்பக்கத்து வீட்டாரெல்லாம் தங்களுக்கும் அது போன்ற ஒரு மோட்டார் பொருத்திய சைக்கிள் செய்து தருமாறு கேட்க ஆரம்பித்தனர். ஹோண்டா செய்து தர ஆரம்பித்தார். சீக்கிரமே அவரிடமிருந்த மோட்டார்கள் எல்லாம் தீர்ந்து போயின.

தன் முயற்சிகளில் சிறிதும் தளராத விக்கிரமாதித்தன் போல் ஹோண்டா மீண்டும் ஒரு தொழிற்சாலை கட்ட எண்ணினார். இந்த முறை பிஸ்டன் தயாரிக்கும் தொழிற்சாலை அல்ல, தன் புதிய கண்டுபிடிப்பான மோட்டார் பைக் தயாரிக்கும் தொழிற்சாலையாக. ஆனால் இருப்பதையெல்லாம் முன்பே இரு முறை தொழிற்சாலை கட்டித் தொலைத்திருந்த அவருக்கு முதலீடு செய்யப் பணம் இருக்கவில்லை. சிந்தித்துப் பார்த்து ஒரு முடிவெடுத்தார்.

ஜப்பான் முழுவதும் இருந்த 18000 சைக்கிள் கடைக்காரர்களுக்கு தன் புதிய கண்டுபிடிப்பைப் பற்றிக் கடிதம் எழுதினார். அன்றைய சூழ்நிலையில் மிகவும் சுலபமாக விலை போகும் பைக்கைத் தயாரிக்க அவர்களால் முடிந்த அளவு முதலீடு செய்தால் நல்ல லாபம் ஈட்டலாம் என்று அவர் விவரித்தார். 18000 கடைக்காரர்களில் சுமார் 5000 பேர் முதலீடு செய்ய முன் வந்தனர். அவருடைய கனவுத் தொழிற்சாலை உருவாகியது.

முதலில் அவர்கள் தயாரித்த மோட்டார் பைக் பெருமளவில் விலை போகவில்லை. காரணம் அதன் எடையும், பெரிய வடிவமும். எனவே ஹோண்டா அந்த இரண்டையும் சரி செய்து சில மாற்றங்களுடன் புதிய மோட்டார் பைக்கை உருவாக்கினார். அது உடனடியாக வெற்றி பெற்றது. பின் வெற்றி அவரை நிழலாகப் பின் தொடர்ந்தது. கார்களையும் உருவாக்க ஆரம்பித்தார். இன்று ஹோண்டா கார்ப்பரேஷன் உலகப் புகழ் பெற்ற பெரிய நிறுவனமாக இருப்பது அனைவருக்கும் தெரியும்.

மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை என்பதை ஆழமாக உணர்ந்திருங்கள். வழக்கம் என்கிற சுகமான சங்கிலி புதியன வரும் போது அதிருப்தி கொள்ளக் கூடும். ஆனாலும் வழக்கமான வாழ்க்கையில் சிறைப்பட்டு இருந்து விடாதீர்கள். மேற்போக்காகப் பார்க்கையில் பிரச்னைகள் போலத் தோன்றினாலும் எல்லா மாற்றங்களும் தங்களுடன் வாய்ப்புகளையும் சேர்த்தே அழைத்து வருகின்றன. வரும் மாற்றங்கள் நம் அபிப்பிராயங்களுக்கேற்ப மாறிவிடுவதில்லை. மாற்றங்கள் காலடி மண்ணையே அசைக்கிறதாகக் கூட சில நேரங்களில் இருக்கலாம். செயலிழந்து மட்டும் போய் விடாதீர்கள். அது கண்டிப்பாய் தோல்வி என்னும் புதைகுழியில் உங்களை ஆழ்த்தி விடும். எனவே பிடிக்கிறதோ, பிடிக்கவில்லையோ உங்கள் அபிப்பிராயங்களை ஒதுக்கி விட்டு வாய்ப்புகளைக் கவனியுங்கள். எப்படிப் பயன்படுத்தலாம் என்று சிந்தியுங்கள். நம்பிக்கையுடனும் உறுதியுடனும் செயல்படுங்கள். கண்டிப்பாக வெற்றிவாகை சூடுவீர்கள்.


தங்கள் கருத்துகளை எதிர்நோக்கும் -
இவன்
ச.பிரேம் குமார்

Sunday, June 13, 2010

தினமும் ஒரு டெபாசிட்

சுய முன்னேற்றக் கட்டுரை




ஒரு தேவதை உங்கள் முன் தோன்றி, "தினமும் உன் கணக்கில் ரூ.86400/- டெபாசிட் செய்கிறேன். அதில் நீ அன்றைய தினமே எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துப் பயன்படுத்தலாம். அந்த நாள் முடிவடையும் போது நீ பயன்படுத்தாமல் மிஞ்சிய தொகையை நானே திரும்பவும் எடுத்துக் கொள்வேன். பயன்படுத்த முடிந்தது உனக்கு, மிஞ்சியது எனக்கு" என்று சொல்கிறது என்று வைத்துக் கொள்வோம்.

தினமும் அதில் ஒரு ரூபாயையாவது நீங்கள் மிஞ்ச விடுவீர்களா? முழுப்பணத்தையும் எப்படிச் செலவழிப்பது என்று திட்டமிட்டுச் செலவு செய்ய மாட்டீர்களா?

உண்மையிலேயே அப்படி ஒரு தேவதை அப்படி ஒரு வரத்தை உங்களுக்கு அளித்துள்ளது. அது தான் கால தேவதை. அது பணத்தை விட விலை மதிப்புள்ள 86400 வினாடிகளை உங்களுக்கு ஒரு நாளில் செலவழிக்கத் தருகிறது. அதில் நீங்கள் எவ்வளவு பயன்படுத்துகிறீர்கள்?

ஒரு நாளில் எந்தெந்த நேரத்தில் என்னென்ன செய்ய வேண்டும் என்று முன் கூட்டியே திட்டமிட்டால் கால விரயத்தை முழுவதும் தடுக்க முடியும். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நமக்கென்று செய்யத் திட்டமிட்ட வேலை இருந்தால் வீண்பேச்சு, வேடிக்கை பார்த்தல், அடுத்தவர்கள் விஷயத்தில் அனாவசியமாக மூக்கை நுழைத்தல் போன்றவற்றில் நாம் ஈடுபட மாட்டோம்.

இவை யாவும் இலக்கில்லாத வாழ்க்கையின் இயற்கையான குணாதிசயங்கள். திட்டமிட்டுச் செயல்படும் போது தெளிவாக இருக்கிறோம். அனாவசியங்களைத் தவிர்க்கிறோம். அதன் மூலம் காலத்தைப் பயனுள்ளதாகக் கழிக்கிறோம்.

ஒவ்வொரு பொருளையும் பயன்படுத்திய பின் அதற்கு உரிய அதே இடத்தில் முறையாக வைக்கப் பழகினால் கால விரயத்தை வெகுவாகக் குறைக்கலாம். இப்பழக்கம் இல்லாதவர்களது காலம் தேடுதலிலேயே பெருமளவு வீணாகிறது. தேடும் நேரம் அதிகரிக்க அதிகரிக்கக் கோபம் அதிகமாகி, சுற்றி உள்ளவர்கள்
மீதெல்லாம் எரிந்து விழுபவர்கள் பலரைத் தினமும் பார்க்கலாம். எனவே உபயோகித்தவுடன் பொருள்களைக் கவனமாக அவற்றிற்குரிய இடத்தில் சிறிய பழக்கம் மூலம் காலத்தை பெருமளவு சேமிக்க முயலுங்கள்.

சமீபத்தில் ஒரு மருத்துவரிடம் ஆலோசனைக்காகச் சென்று இருந்தேன். அங்கு நல்ல கூட்டம். அங்கு வந்த ஒரு பெரியவர், மருத்துவரைச் சந்திக்க அரைமணி நேரமாவது ஆகும் என அறிந்ததும் அமைதியாக உட்கார்ந்து பையிலிருந்து ஒரு இன்லாண்டு லெட்டரை எடுத்து எழுத ஆரம்பித்து விட்டார். எல்லோரும் அடுத்தவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த அந்த நேரத்தில் அந்த நேரத்தில் தன் மற்றொரு காரியத்தை முடித்துக் கொண்ட அந்தப் பெரியவர் செயல் என்னை மிகவும் கவர்ந்தது. இப்படிக் காத்திருக்கும் காலங்களில் நாமும் கூட பயனுள்ள எதையாவது செய்யத் தயாராக இருக்கலாமே!

காலத்தை முறையாக, திறம்படப் பயன்படுத்த விரும்புபவர்கள் முதலில் டிவி முன் அமரும் நேரத்தைக் குறைப்பது நல்லது. இன்றைய காலத்தில் நம் நேரத்தை டிவி போல வேறு எதுவும் திருடிக் கொள்வதில்லை. பிடிக்கிறதோ இல்லையோ அதன் முன் அமர்ந்து நம் காலத்தை வீணடிக்கிறோம். நமக்குப் பிடித்த பயனுள்ள ஓரிரு நிகழ்ச்சிகளை மட்டும் தேர்ந்தெடுத்து அவை முடிந்தவுடன் டிவியை அணைத்து விடுவது
நல்லது.

ஒவ்வொரு நாள் இரவும் உங்களது அன்றைய செயல்களைச் சற்று ஆராய்ந்து பாருங்கள். காலதேவதையின் 'டெபாசிட்' எப்படியெல்லாம் செலவாகி இருக்கிறது என்று கணக்கிடுங்கள். எப்படிச் செயல்பட்டிருந்தால் காலம் இன்னும் சிறப்பாகப் பயன்பட்டிருக்கும் என்று சிந்தியுங்கள். மறுநாள் அது போலவே இன்னும் சிறப்பாகவே காலத்தைப் பயன்படுத்திச் செயல்படுவேன் என்று மனதில் உறுதி பூணுங்கள்.

எல்லாவற்றைற்கும் மேலாக ஒரு செயலைச் செய்யும் போது உங்கள் முழுக்கவனத்தையும் அதில் வையுங்கள். இதனால் அச்செயலை விரைவாகவும் சிறப்பாகவும் செய்யும் ஆற்றலை நீங்கள் பெறுவீர்கள்.

காலதேவதை கருணை உள்லது. ஒரு நாள் அந்த 'டெபாசிட்'டை நீங்கள் வீணாக்கினீர்கள் என்பதற்காக மறுநாள் உங்களுக்கு அதைத் தராமல் இருப்பதில்லை. பெருந்தன்மையுடன் உங்களுக்குத் தொடர்ந்து தந்து கொண்டே இருக்கிறது. அதை முழுமையாகப் பயன்படுத்தி முன்னேறுங்கள்.

இவன்
ச.பிரேம் குமார்

Friday, June 11, 2010

அறிவைப் பெருக்கும் தோப்புக்கரணம்


ஒரு காலத்தில் தோப்புக்கரணம் போடுவது என்பது பள்ளிகளில் மிகச் சாதாரணமான விஷயம். தவறு செய்தாலோ, வீட்டுப்பாடம் எழுதி வரா விட்டாலோ ஆசிரியர்கள் மாணவர்களைத் தோப்புக்கரணம் போட வைப்பது வாடிக்கை. பரிட்சை சமயத்தில் பக்தி அதிகரித்து மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற தாங்களாகவே பிள்ளையார் முன் தோப்புக்கரணம் போடுவதுமுண்டு. ஆனால் இக்காலத்தில் தோப்புக்கரணம் போடுவதை அதிகமாக நாம் காண முடிவதில்லை.

ஆனால் இந்த தோப்புக்கரணம் அமெரிக்காவில் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த மருத்துவர் எரிக் ராபின்ஸ் (Dr.Eric Robins) இந்த எளிய உடற்பயிற்சியால் மூளையின் செல்களும் நியூரான்களும் சக்தி பெறுகின்றன என்கிறார். அவர் தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு அந்த உடற்பயிற்சியை சிபாரிசு செய்வதாகக் கூறுகிறார். பரிட்சைகளில் மிகக் குறைந்த மதிப்பெண்கள் எடுக்கும் ஒரு பள்ளி மாணவன் தோப்புக்கரண உடற்பயிற்சியைச் சில நாட்கள் தொடர்ந்து செய்த பின் மிக நல்ல மதிப்பெண்கள் வாங்க ஆரம்பித்ததாகக் கூறுகிறார்.


யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் நிபுணரான டாக்டர் யூஜினியஸ் அங் (Dr. Eugenius Ang) என்பவர் காதுகளைப் பிடித்துக் கொள்வது மிக முக்கிய அக்குபஞ்சர் புள்ளிகளைத் தூண்டி விடுகின்றன என்று சொல்கிறார். அதனால் மூளையின் நரம்பு மண்டல வழிகளிலும் சக்தி வாய்ந்த மாற்றங்கள் ஏற்படுவதாக அவர் தெரிவிக்கிறார். இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழுகையில் மூளையின் இரு பகுதிகளும் பலனடைகின்றன என்று சொல்கிறார்.

தோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் மாற்றங்களை EEG கருவியால் டாக்டர் யூஜினியஸ் அங் அளந்து காண்பித்தார். மூளையில் நியூரான்கள் செயல்பாடுகள் அதிகரிப்பதை பரிசோதனையில் காண்பித்த அவர் மூளையின் வலது, இடது பாகங்கள் சமமான சக்திகளை அடைவதாகவும் சொன்னார். மிக நுண்ணிய தகவல் அனுப்பும் காரணிகள் வலுப்பெறுவதும் பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டாக்டர் யூஜினியஸ் அங் தானும் தினமும் தோப்புக்கரணம் போடுவதாகக் குறிப்பிடுகிறார்.

Autism, Alzheimer போன்ற இக்காலத்தில் அதிகரித்து வரும் நோய்களுக்குக் கூட இந்த தோப்புக்கரண உடற்பயிற்சியை ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கிறார்கள். தோப்புக்கரணம் தினமும் செய்வதன் மூலம் மேற்கண்ட நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மிக நல்ல பலன்களைப் பெறுவதாக அவர்களது பரிசோதனைகள் சொல்கின்றன.

ப்ராணிக் சிகிச்சை நிபுணர் கோ சோக் சூயி (Master Koa Chok Sui) தன்னுடைய Super Brain Yoga என்ற புத்தகத்தில் தோப்புக்கரணத்தைப் பற்றியும் அதன் பலன்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய சொற்பொழிவுகளிலும் இதை அதிகம் குறிப்பிடுகிறார்.

இதனால் தான் தோப்புக்கரணம் பள்ளிகளில் நம் முன்னோர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று தோன்றுகிறது. படிக்காத மாணவர்கள் தோப்புக்கரண முறையால் தண்டிக்கப்படுவதன் மூலம் அவர்களது அறிவுத் திறன் அதிகரிக்க வழியும் காண்பிக்கப்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது.

இந்த தோப்புக்கரணப்பயிற்சியை தினந்தோறும் மூன்று நிமிடங்கள் செய்தால் போதும் வியக்கத் தக்க அறிவு சார்ந்த மாற்றங்களைக் காணலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். அவர்கள் பரிந்துரைக்கும் தோப்புக்கரண பயிற்சியை அவர்கள் சொல்கின்ற முறையிலேயே காண்போமா?

உங்கள் கால்களை உங்கள் தோள்களின் அகலத்திற்கு அகட்டி வைத்து நின்று கொள்ளுங்கள். உங்கள் பாதங்கள் நேராக இருக்கட்டும். வலது காதை இடது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக் கொள்ளுங்கள். அதே போல் இடது காதை வலது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக் கொள்ளுங்கள். மூச்சை நன்றாக வெளியே விட்டபடி அப்படியே உட்கார்ந்து மூச்சை உள்ளே நன்றாக இழுத்தபடி எழுந்து நில்லுங்கள். மூச்சும், உட்கார்ந்து எழுவதும் ஒரு தாளலயத்துடன் இருக்கட்டும்.

செய்து பழக்கமில்லாதவர்களுக்கு ஆரம்பத்திலேயே மூன்று நிமிடங்கள் தொடர்ந்து தோப்புக்கரணம் செய்வது கடினமாக இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் ஒரு நிமிடம் செய்வதில் இருந்து ஆரம்பித்து நாட்கள் செல்லச் செல்ல இரண்டு நிமிடங்கள், பிறகு மூன்று நிமிடங்கள் என்று அதிகரியுங்கள்.

ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் மிக நல்ல பலன்களைப் பார்க்கும் போது உங்கள் அறிவுத் திறனின் வளர்ச்சிக்காக மூன்று நிமிடங்கள் தினமும் செலவழிப்பது மிகப்பெரிய விஷயமல்ல அல்லவா?

இந்த பகுதி பிடித்திருந்தால் தங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்...

Thursday, June 10, 2010

மனிதம் மிளிர்கிறது...




அது ஒரு மாலை நேரம். இடம் நியூயார்க்கின் ப்ரூக்ளின் நகரம். அங்குள்ள குறைபாடுகள் உள்ள சிறுவர், சிறுமியர் படிக்கும் பள்ளியில் ஒரு விழா நடந்து கொண்டிருக்கிறது. அப்போது ஒரு சிறுவனின் தந்தை பேசிய பேச்சு அங்கு வந்திருந்த அனைவர் மனதையும் கரைத்து அது மறக்க முடியாத பேச்சாக அமைந்தது..

அவர் குறைபாடுள்ள குழந்தைகளைப் பெற்ற பெற்றோர் படும் மன வேதனைகளை மிக உருக்கமாகச் சொன்னார். “...... இறைவன் படைப்புகள் எல்லாம் அற்புதமானது, நிறைவானது, குறைபாடில்லாதது என்று எப்படிச் சொல்ல முடியும்? சாதாரண குழந்தைகள் சாதாரணமாகச் செய்ய முடிந்த எத்தனையோ வேலைகள் என் மகன் ஷாயாவால் முடிவதில்லை. அவனால் சின்னச் சின்ன தகவல்களைக் கூட நினைவில் வைத்துக் கொள்ள முடிவதில்லை. அவனால் செய்ய முடிந்தவைகளை விட செய்ய முடியாதவை தான் அதிகம். செய்ய முடிந்தவைகளைக் கூட அரைகுறையாய் தான் செய்ய முடிகிறது. அப்படி இருக்கையில் இறைவன் படைப்பில் நிறைவு உள்ளது என்பதை எப்படி நம்மால் கூற முடியும்?”

அவர் உருக்கமாகக் கேட்டு விட்டு அங்கு கூடியிருந்தோரைப் பார்த்தார். அத்தனை பேரிடமும் அதற்கு பதில் இருக்கவில்லை. அத்தனை பேரும் அந்த மனிதரின் மன வலியை உணர்ந்தவர்களாக மௌனமாக இருந்தார்கள். அந்தத் தந்தை சொன்னார். “நான் நம்புகிறேன், இது போன்ற குழந்தைகளைப் படைக்கும் இறைவன் நிறைவை அந்தக் குழந்தைகளிடம் பழகும் மனிதர்களிடம் தான் எதிர்பார்க்கிறான். இது என் மகன் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தின் போது நான் புரிந்து கொண்டேன்....” அவர் அந்த நிகழ்ச்சியை மிகவும் நெகிழ்ச்சியுடன் விவரித்தார்.

ஒரு நாள் மதிய வேளையில் அவரும் அவர் மகன் ஷாயாவும் ஒரு விளையாட்டு மைதானம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். அந்த மைதானத்தில் சில சிறுவர்கள் தளப்பந்து (base ball) விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஷாயா அந்தச் சிறுவர்கள் விளையாடுவதைப் பார்த்து தன் தந்தையிடம் கேட்டான். “அப்பா அவர்கள் என்னையும் அந்த விளையாட்டில் சேர்த்துக் கொள்வார்களா?”

அவருக்குத் தன் மகனால் அந்த விளையாட்டைத் திறம்பட விளையாட முடியாது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அந்த சிறுவர்களோ மிகத் தீவிர ஈடுபாட்டுடன் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் சென்று கேட்கவே தயக்கமாக இருந்தாலும் அவர் முயற்சி செய்து பார்ப்பதில் தவறில்லை என்று எண்ணினார். தயக்கத்துடன் சென்று ஒரு சிறுவனிடம் கேட்டார். “என் மகனும் ஆட ஆசைப்படுகிறான். அவனையும் சேர்த்துக் கொள்வீர்களா?”

அந்த சிறுவன் ஷாயாவைப் பார்த்தான். பார்த்தவுடனேயே அவன் குறைபாடுள்ள சிறுவன் என்பதை அந்த சிறுவன் புரிந்து கொண்டான். தன் நண்பர்களைப் பார்த்தான். அவர்கள் ஒன்றும் சொல்லவில்லை. அவன் ஷாயாவின் முகத்தில் தெரிந்த ஆர்வத்தைப் பார்த்து மனம் இளகியவனாக அவரிடம் சொன்னான். “நாங்கள் இப்போது எட்டாவது இன்னிங்க்ஸில் இருக்கிறோம். இப்போதே ஆறு ரன்கள் குறைவாக எடுத்து பின்னணியில் இருக்கிறோம். என்னுடைய டீமில் அவனைச் சேர்த்துக் கொள்கிறேன். ஒன்பதாவது இன்னிங்க்ஸில் அவனுக்கு பேட்டிங் தருகிறோம்”

அதைக் கேட்டு ஷாயாவின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியைப் பார்த்த தந்தையின் மனம் நிறைந்தது. ஷாயா அந்த விளையாட்டுக்காக கையுறையை மாட்டிக் கொண்டு மைதானத்தில் பெருமிதத்துடன் போய் நின்றான். ஆனால் அந்த விளையாட்டின் எட்டாவது இன்னிங்க்ஸிலன் இறுதியில் ஷாயாவை சேர்த்த அணி மூன்று ரன்கள் மட்டுமே பின்னணியில் இருந்தது. நன்றாக ஆடத் தெரிந்தவன் ஆடினால் அவர்கள் அணி வெற்றி பெறும் வாய்ப்பு இருக்கிறது. அப்படி ஒரு இக்கட்டான கட்டத்தில் ஷாயாவை அவர்கள் ஆட விடுவார்களா என்ற சந்தேகம் அவன் தந்தைக்கு வந்தது.

ஆனால் சொன்னபடி ஷாயாவை ஆட அவர்கள் அனுமதித்தார்கள். ஷாயாவிற்கு அந்த பேட்டை சரியாகப் பிடிக்கவே தெரியவில்லை. அவனை ஆட அனுமதித்த சிறுவன் பேட்டை எப்படிப் பிடிக்க வேண்டும் என்று சொல்லித் தந்தான். பந்து எறியும் சிறுவன் சற்று முன்னால் வந்து அந்தப் பந்தை மென்மையாக வீசினான். அந்தப் பந்தை ஷாயா அடிக்க உதவ வேண்டும் என்பது அவன் எண்ணமாக இருந்தது. அந்தப் பந்தை அவன் அப்படி வீசியும் ஷாயாவால் பேட்டால் அடிக்க முடியவில்லை. அடுத்த முறை ஷாயாவின் அணிச் சிறுவன் ஒருவன் ஷாயாவுடன் சேர்ந்து பேட்டைப் பிடித்துக் கொண்டான்.

பந்தெறிபவன் அடுத்த முறையும் சற்று முன்னால் வந்து மென்மையாகவே வீசினான். ஷாயாவும், அவனுடைய சகாவும் சேர்ந்து இந்த முறை பந்தை அடித்தார்கள். அந்தப் பந்து குறைவான வேகத்தோடு ப்ந்தெறிபவன் காலடியில் வந்து விழுந்தது. அவன் அதை எடுத்து முதல் தளக்காரனிடம் எடுத்து வீசினால் ஷாயா ஆட்டமிழந்து அவன் அணியும் தோற்று விடும்.
ஆனால் அந்தப் பந்தெறிபவன் வேண்டுமென்றே அதை மிக உயரமாகத் தூர வீச ஷாயாவின் அணியினர் கத்தினார்கள். “ஷாயா ஓடு. வேகமாக முதல் தளத்துக்கு ஓடு...” ஷாயா இப்படியொரு நிலையை எதிர்பார்த்திருக்கவில்லை. அவன் ஒரு கணம் திகைத்து பின் தலை தெறிக்க ஓடினான். முதல் தளத்தை அவன் அடைந்த போது அந்தப் பந்தை எதிரணிச் சிறுவன் எடுத்தான். முதலில் பந்தெறிந்தவனுடைய எண்ணம் அவனுக்கும் புரிந்திருந்தது. ஒரு ரன் எடுத்து முடித்த நம்ப முடியாத மகிழ்ச்சியில் இருந்த ஷாயாவின் முகத்தைப் பார்த்தவன் அந்த பந்தை தன் அணிக்காரன் எளிதில் பிடிக்க முடியாதபடி வீசினான்.

மைதானத்தில் “ஷாயா ஓடு. இரண்டாம் தளத்திற்கு வேகமாக ஓடு” என்ற சத்தம் பலமாக எழுந்தது. ஷாயா மீண்டும் தன்னால் முடிந்த வரை தலை தெறிக்க ஓடினான். இப்படியே அந்த ஆட்டத்தில் ஷாயாவை நான்கு ரன்கள் எடுக்க வைத்தார்கள். ஷாயாவின் அணி வெற்றி பெற்றது..

நான்காவது ரன்னை எடுத்து முடித்த போது மைதானத்தில் பதினெட்டு ஆட்டக்காரச் சிறுவர்களும் ஷாயாவைத் தோள்களில் தூக்கி ஆட்ட நாயகனாகக் கொண்டாட ஷாயாவின் முகத்தில் தெரிந்த மட்டில்லாத மகிழ்ச்சியைக் கண்ட அந்த தந்தை கண்ணில் அருவியாகக் கண்ணீர் வழிந்தது.

அதைச் சொல்லும் போதும் அந்தத் தந்தை கண்களில் கண்ணீர். “அன்றைய தினத்தில் அந்த பதினெட்டு சிறுவர்களும் இறைவனின் படைப்பின் நிறைவை எனக்குத் தெரியப்படுத்தினார்கள். என் மகன் அது வரை அவ்வளவு மகிழ்ச்சியாகப் பெருமையுடன் நின்றதைக் காணும் பாக்கியம் எனக்கு இருக்கவில்லை. அந்த நாள் என் மகன் வாழ்விலும், என் வாழ்விலும் மறக்க முடியாத நாளாகி விட்டது....”

அந்த சிறுவர்களுக்கு ஒவ்வொரு விளையாட்டிலும் வெல்லத் துடிக்கிற வயது. அவர்களுக்கு வெற்றி மிக முக்கியம். வாழ்வில் பெரிய பெரிய சித்தாந்தங்கள் எல்லாம் அறிந்திருக்கும் வயதோ, பக்குவமோ இல்லாத வயதினர் அவர்கள். அவர்கள் அன்று முன்பின் அறியாத ஷாயா என்ற குறைபாடுள்ள சிறுவனிடம் காட்டிய அன்பும், பரிவும் ஒப்புயர்வில்லாதவை. அவர்கள் அந்தச் சிறுவனை வெற்றி பெறச் செய்த செயல் சாமானியமானதல்ல.

இது போன்ற செயல்களில் தான் உண்மையாக மனிதம் மிளிர்கிறது. அந்த விளையாட்டை ஷாயாவின் வீட்டார்கள் ஆடி அவனை வெற்றி பெறச் செய்திருந்தால் அது செய்தியல்ல. முன்பின் அறியாத சிறுவர்களிடம் இருந்து அந்த அன்பு பிறந்தது தான் வியப்பு. அது தான் மனிதம்.



இது போன்ற மனிதம் மிளிர பெரிய பெரிய தியாகங்கள் கூடத் தேவையில்லை. மிகப் பெரிய நிலையில் இருக்க வேண்டியதில்லை. தங்களைப் பெரிதும் வருத்திக் கொண்டு யாருக்கும் யாரும் எதுவும் செய்ய வேண்டியதில்லை. தினசரி வாழ்க்கையில் நம்முடைய அன்பான சிறிய செயல்களால், சிறிய விட்டுக் கொடுத்தல்களால் பெரிய மகிழ்ச்சியை அடுத்தவர்கள் மனதில் ஏற்படுத்த முடியும். அதுவே மனிதம்.

இந்த மனிதம் பலவீனர்களைப் பார்க்கிற போது பலசாலிகளுக்கு வந்தால், இல்லாதவர்களைப் பார்க்கிற போது இருப்பவர்களுக்குள்ளே எழுந்தால், வேதனையிலும், துக்கத்திலும் இருப்பவர்களைப் பார்க்கையில் அவற்றை நிவர்த்தி செய்ய முடிந்தவர்கள் மனதில் மலர்ந்தால் இந்த உலகம் சொர்க்கமாக அல்லவா மாறி விடும்! நம்மால் முடிந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் அது போன்ற ஒரு சொர்க்கத்தை உருவாக்க நாம் முயற்சிப்போமா?


-என்.கணேசன்
நன்றி: ஈழநேசன்